தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.