டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2021, 02:09 PM IST
  • தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
  • இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாளை முதல் டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது? title=

சென்னை: கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

பல வகைகளில் வேறுபட்டுள்ளது வைரசின் புதிய மாறுபாடு
தற்போது பூதாகாரம் எடுத்து வரும் கொரோனா வைரசின் மாறுபட்ட வகை, பல வகைகளில் முந்தைய வகையை விட வேறுபட்டுள்ளது. இந்த வகையின் தீவிரம் மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த மாறுய்பாட்டின் பரவும் விதமும் பாதிக்கும் விதமும் முந்தைய வைரசின் வகையை விட அதிகமாகவும் தீவிரமாகவும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் கொரோனா வைரஸ் நிலவரம்

தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது, ஏப்ரல் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 91,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8490 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் தொற்றின் பரவும் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல், சராசரியாக ஒவ்வொரு நாளும் 5000-க்கும் மெற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏப்ரல் 14ம் தேதியன்று மட்டும் 7000 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். ஏப்ரல் 16  ஆம் தேதி 8000 பேரும், 17ம் தேதி 9000-க்கும் அதிகமானோரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

தமிழகத்தின் (Tamil Nadu) மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முன்னணியில் உள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 17 வரை புதிதாக 30,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew

டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை எல்லையை மீறி சென்று கொண்டிருக்கின்றது. ஒற்றை நாள் தொற்றின் அளவு 25 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாளை முதல் டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழகத்திலும் ஊரடங்கு விதிக்கப்படுமா?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 4 மனி வரை ஊரடங்கு என பலவித கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்த சமயத்தில் அரசியல் பேரணிகளும், தேர்தல் பரப்புரைகளும் பஞ்சமில்லாமல் நடந்தன. இந்த கூட்டங்களுக்கு வந்த மக்களும், சில தலைவர்களும் கூட பெரும்பாலான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு, மக்களின் இந்த பொறுப்பற்ற நிலையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

இந்த பரவலை தடுக்க, சில நாட்களுக்காவது முழு ஊரடங்கை (Curfew) விதிக்க வெண்டும் என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனினும், இது தொடர்பாக இன்னும் அரசு சார்பில் எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை. பல வித அபராதங்கள், கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட நேரத்திற்கான முடக்கங்கள் என தமிழக அரசு அறிவித்து வருகிறது. எனினும், தொற்று அதிகமானால், முழு ஊரடங்கை அரசு அமல்படுத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இருக்காது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். 

இரவு நேரங்களில் பேருந்துகள் ரத்து

இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அரசு பேருந்துகள் காலை 4 மணி முதல் இரவு 8 வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. விரைவு பேருந்து வழித்தடங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏதுவாக்க, பயண தேதிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி வசதியை கோராதவர்களுக்கு முன்பதிவு கட்டணம் திரும்பி கொடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.  

ALSO READ: புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News