தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை திறப்பு விவகாரம் குறித்து விவாதிக்க வரும் டிசம்பர் 24-ஆம் நாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது!
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த உத்தரவினை தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை திறக்கப்படுமென ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சணைகள் எழாமல் இருக்க அப்பகுதியில் ₹100 கோடி மதிப்பில் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க எதிர்வரும் 24-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட தடை விதிப்பதாக கூறி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்தே வேதாந்தா நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உதவியை நாடியது. தேசிய பசுமை தீர்பாயத்தில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையிலேயே தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுப்படகூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியே சேர்ந்த பாத்திமா என்பவர் தொடுத்த வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவினை பிரப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையினை வரும் டிசம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில்., வெறும் அரசாணைகளை வெளியிடாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட தடை விதிப்பதற்கான செயல்பாடுகளில் அரசு செயல்பட வேண்டும் என தூத்துகுடி பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.