மேகதாது அணை: கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை தேவை இல்லை -அமைச்சர் சி.வி.சண்முகம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2018, 03:10 PM IST
மேகதாது அணை: கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை தேவை இல்லை -அமைச்சர் சி.வி.சண்முகம் title=

சுப்ரீம் கோர்ட்டு ஆணையின் படி, காவிரி நதிநீர் குறித்து புதிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தயார் செய்தது. அந்த செயல் திட்டத்தை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்படி காவிரிபடுக்கையில் எந்தவொரு அணை கட்டவேண்டும் என்றாலும், நான்கு மாநிலங்களை கலந்து ஆலோசித்து பின்னரே, முடிவு எடுக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கூறுகிறது.

ஆனால்  தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சட்ட விரோதமா மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் அனுமதியோடும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டி, அனைத்து கட்சியும் சேர்ந்து மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளித்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய தமிழக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணைகள் கட்டக்கூடாது. எனவே சட்டத்துக்கு உட்பட்டு மேகதாது அணை கட்டும் பணிகளை கைவிட வேண்டும். சட்டத்தை மீறி கர்நாடக அரசு செயல்படுவதால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என கடிதத்தில் கூறியுள்ளார். 

Trending News