சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி ஷிக்கும் இடையிலான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு இன்று சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. சீன ஜனாதிபதி தனது இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.
Tamil Nadu: Chinese President Xi Jinping arrives in Chennai, received by Governor Banwarilal Purohit. The second informal summit between Prime Minister Narendra Modi and President Xi will begin in Mahabalipuram today. pic.twitter.com/rkhJ8ISy6E
— ANI (@ANI) October 11, 2019
அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார். பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.