நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 21 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து, உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது. விலையை குறைக்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. துருக்கி, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தாலும் வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கிறது.
அந்தவகையில் தற்போது தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.இதையொட்டி திட்டை கிராமத்தில், வட்டாட்சியர் பிரேம்சந்தர் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் 21 டன் வெங்காயம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில் இருந்து ஏற்றிவருவதாக ஓட்டுனர் தெரிவித்தார். மேலும் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டதால் சரக்கு வாகனத்துடன் வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்