மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்"

மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்.

Last Updated : Sep 13, 2021, 11:39 PM IST
  • மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்.
  • திமுக அரசின் கையாலாகத்தனமுமே ஒரு இளந்தளிரின் உயிரைப் போக்கியிருக்கிறது.
  • பிழைப்புவாத அரசியலை செய்ய முற்பட்டால் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது.
மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்" title=

நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

'நீட்' தேர்வு அச்சத்தில் சேலம், மேட்டூரையடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தனுஷ் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். ஏற்கனவே, தங்கை அனிதா உள்ளிட்ட 13 பச்சிளம் பிள்ளைகள் நீட் தேர்வினால் பலியாகி அதற்கான நீதியே இன்னும் கிடைத்திடாத துயர்மிகு நிலையில் தம்பி தனுசும் உயிர்துறந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெருஞ்சோகத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் பெற்றோரை எத்தகைய வார்த்தைகளால் தேற்றுவதெனத் தெரியவில்லை. பிஞ்சுகளைப் பறிகொடுத்துவிட்டு நெஞ்சம் குமுறும் எளிய மகனாய் அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் 13 பச்சிளம் பிள்ளைகள் உயிர்ப்பலியான நிலையில், ஆட்சி மாறியும், காட்சி மாறாத அவல நிலையாய்ப் புதிதாகப் பொறுப்பேற்ற திமுக ஆட்சியிலும் பிஞ்சுகளின் மரணச்செய்தி தொடர்கதையாய் நீள்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அநீதி இழைக்கப்படுவது கண்கூடாகத்தெரிந்தும் அதற்கெதிராக எதுவும் செய்யவியலா கையறு நிலையும், இழப்பு தரும் ஆற்றாமையும், அதன்மூலம் விளையும் அடக்கவியலா பெருங்கோபமும் நெஞ்சினுள் தீரா வன்மத்தை விதைக்கிறது. நீட் தேர்வினால் நிகழும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தற்கொலையல்ல; அது மத்தியில் ஆளும் பாஜக அரசின் அதிகாரத்திமிரினாலும், அடாவடித்தனத்தினாலும், மாநிலத்தை ஆளும் இருபெரும் திராவிடக்கட்சிகளின் அலட்சியப்போக்கினாலும், அக்கறையின்மையாலும் நிகழ்த்தப்பட்டு வரும் பச்சைப்படுகொலைகளாகும். ஆரிய இனப்பகை கொண்டு தமிழர் விரோதப்போக்கோடு தொடர்ச்சியாகச் செயல்படும் மோடி அரசின் நயவஞ்சகத்தனமும், அதனைப் பொருட்படுத்தாது காலங்கடத்திய திமுக அரசின் கையாலாகத்தனமுமே ஒரு இளந்தளிரின் உயிரைப் போக்கியிருக்கிறது.

ALSO READ : TN Assembly: NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது

எதிர்காலம் குறித்தான எண்ணற்ற கனவுகளைக் கொண்டு கல்வி பயிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளது மருத்துவக்கனவை முற்றாகச் சிதைத்தழித்து, அவர்களைப் புதைகுழிக்குள் தள்ளும் படுபாதக பாஜக அரசு, குற்றவுணர்வின்றி தமிழகத்தில் அரசியல் செய்ய முற்படுவதும், நீட் தேர்வை நியாயப்படுத்த முனைவதும் துளியும் உளச்சான்றில்லா ஈனச்செயலாகும். நாட்டை ஒற்றைமயப்படுத்தி, தேசியத்தகுதித்தேர்வு எனும் பெயரில் எளிய, கிராமப்புறத்து மாணவர்களை வடிகட்டி வெளியேற்றி, வருணாசிரமக்கோட்பாட்டை நவீன வடிவில் நிலைநிறுத்த துடிக்கும் கொலைவெறிச்செயலின் மூலம் தமிழ்ப்பிள்ளைகளின் இரத்தம் குடிக்கும் பாஜக எனும் கோடரிக்காம்பை, தமிழகத்தில் வேரடி மண்ணோடு பிடுங்கி, பூண்டோடு அழித்து முடிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்.

ஆட்சியதிகாரத்திற்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று ரத்து செய்துவிடுவோம் என வாக்குறுதியளித்த திமுக, அரியணையில் அமர்ந்து மூன்று மாத காலம்வரை தீர்மானம் நிறைவேற்றாது காலத்தைப் போக்கியதும், நீட் தேர்வு நடத்தப்படுவது உறுதியான பிறகே தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுப்பதும் தற்செயலானதல்ல; இது பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்றவாறு ஒத்திசைந்து செல்லும் சந்தர்ப்பவாதமாகும்.

சட்டமன்றக்கூட்டத்தொடரில் ஒப்புக்குத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அதற்கு ஒப்புதலை அளிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்காது, அமைதியாகி பாஜகவின் பாதம்பணிந்தது அதிமுக அரசின் அடிமைத்தனமென்றால், தீர்மானமே இயற்றாது மூன்று மாதமாய் மௌனித்திருந்த திமுக அரசின் போக்கும் அதனையொத்த அடிமைத்தனம்தான். திமுக ஆட்சியமைந்தால், நீட் தேர்வை உறுதியாக ரத்து செய்து விடுவோமென்றும், அதற்கென இரகசியத்திட்டம் வைத்திருக்கிறோமென்றும் மனம்போன போக்கில் தேர்தல் பரப்புரையில் கதையளந்துவிட்டு இப்போது முற்றாகக் கைவிரித்து மாணவர்களை ஏமாற்றியிருக்கும் திமுக ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாண்டில் செப்டம்பர் மாதம் போல நீட் தேர்வு நடத்தப்படலாம் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் முன்முடிவை விரைந்து எடுக்க வேண்டிய அரசு, அதனைச் செய்யாது தள்ளிப்போட்டது திட்டமிட்டச் சூழ்ச்சியேயாகும். பாஜக அரசிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து, தமிழர் விரோதத் திட்டங்களை முழுதாக ஏற்று, அவற்றினை தமிழகத்திற்குள் உள்நுழைவு செய்திட துணைநின்றிட்ட முந்தைய அதிமுக அரசின் கோழைத்தனத்தை அடியொற்றும் திமுக அரசின் நழுவல் போக்கு வெளிப்படையான பிழைப்புவாத அரசியலாகும்.

தமிழர்களின் உணர்வையும், உரிமையையும் துளியும் மதித்திடாது தமிழ்த்தேசிய இனத்தின் நலத்திற்கும், வளத்திற்கும் எதிராகத் திட்டங்களையும், சட்டங்களையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கானது சனநாயகத்திற்கு எதிரான கொடும் அரசப்பயங்கரவாதமாகுமெனக் கூறி, அவற்றிற்குக் கடும் எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன். இத்தோடு, நீட் தேர்வை எதிர்த்து பாஜக அரசுடன் சனநாயகப்போர் செய்து, அரசியல் சமர் மூலம் மாநிலத்தின் மண்ணுரிமையையும், மாணவர்களின் கல்வியுரிமையையும் நிலைநாட்ட வேண்டிய திமுக அரசு, வெற்று வார்த்தைகளைக்கூறி நாட்களை நகர்த்தி, பாஜகவின் நோக்கம் நிறைவேற துணைநின்று தம்பி தனுசின் உயிர் பறிபோகக் காரணமானது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்தப் பச்சைத்துரோகமாகும். தற்போது நீட் தேர்வே நடத்தி முடிக்கப்பட்ட பின், தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைப்பது திமுக அரசு செய்யும் வெற்றுச்சடங்கு என்பதைத்தாண்டி வேறில்லை.

ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் உளப்பூர்வமான அக்கறைகொண்டு நீட் தேர்வுக்கெதிராக நாடெங்கிலுமுள்ள மாநிலக்கட்சிகளையும், மாநில முதல்வர்களையும், சனநாயகச்சக்திகளையும் ஒன்றுதிரட்டி, நீட் தேர்வுக்கெதிராகப் பெரும் அணிச்சேர்க்கையைச் செய்து, பாராளுமன்றத்தில் தங்களுக்கிருக்கும் பலத்தைக்கொண்டு நீட் எனும் ஒற்றைத்தகுதித்தேர்வு தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவில் எந்தவொரு தேசிய இனத்தின் மக்களுக்கும், மாநிலத்திற்கும் தேவையில்லை எனும் நிலையை உருவாக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மாறாக, ஒப்புக்குத் தீர்மானத்தை இயற்றி, இவ்விவகாரத்தைக் கடத்தி, மக்களின் மறதியை அடிப்படையாகக் கொண்டு வழமையான பிழைப்புவாத அரசியலை செய்ய முற்பட்டால் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ : Neet bill: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News