காகித பூக்கள் ஒருபோதும் மணக்காது: கூறிய ஸ்டாலின்! எதற்கு தெரியுமா?

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம் ஆனால், ஒருபோதும் மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Last Updated : Feb 20, 2018, 02:27 PM IST
காகித பூக்கள் ஒருபோதும் மணக்காது: கூறிய ஸ்டாலின்! எதற்கு தெரியுமா? title=

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம் ஆனால், ஒருபோதும் மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை நாளை கமல்ஹாசன், ராமேஸ்வரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

அதிமுகவிற்கு திமுகதான் மாற்று என்ற கருத்து உலவி வந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அக்கட்சியனரை சற்று அசைத்து பார்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும்,  பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!

தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.

நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்புகளின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்! இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.  

"பருவநிலை மாறும் போது சில பூக்கள் மலரும். பின் உதிர்ந்து விடும். திமுக என்ற பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது.

திமுக குடும்ப ஆட்சிதான். அதில் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் பலர் உள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை காலை கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கவுள்ள நிலையில், காகிதப் புக்கள் மணக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Trending News