ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்...

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம் அடைந்துள்ளது.

Last Updated : Oct 4, 2019, 08:24 AM IST
ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்... title=

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தான் 69, 541 வாக்குகள் பெற்றதாகவும், தன்னை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐ.எஸ். இன்பதுரை 69, 590 வாக்குகள் பெற்றதாகவும், அதாவது தன்னை விட 49 வாக்குகள் அதிகம் பெற்றதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தத் தேர்தலில் அதிகாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர். தபால் வாக்குகளை எண்ணும்போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் இந்த வாக்குகள் அனைத்தையும் எண்ண வேண்டும். இதற்காக தேர்தல் பணியில் முன் அனுபவம் உள்ள அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ இன்பத்துரை அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்பத்துரை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஏற்கெனவே கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11.30 மணிக்கும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21 ஆகிய 3 சுற்று வாக்குகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவர் பால்பாண்டி உள்பட 24 பேரை நியமித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending News