மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. முதல் பாகத்தில் சூரிக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர் எஸ் இன்ஃபோடைமென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி தவிர பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சேட்டன், மூணார் ரமேஷ், பாவல் நவகீதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | விடாமுயற்சி vs குட் பேட் அக்லி! ஒரே நாளில் ரிலீஸாகும் அஜித்தின் 2 படங்கள்?
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியை சூரியின் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்கின்றனர். இரண்டாம் பாகம் அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. வாத்தியாரை கைது செய்த செய்தி மக்களுக்கு தெரிய வர இதனை அரசாங்கம் எப்படியாவது மறைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. ஆனால் அதற்குள் விஜய் சேதுபதி காவல்துறையிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இதற்கிடையில் வாத்தியாரின் வரலாறு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காவல்துறையிடம் இருந்து தப்பித்தாரா? அவருக்கு என்ன ஆனது? என்பதே விடுதலை 2 படத்தின் கதை.
வெற்றிமாறன் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் முழுக்க அவர் பேசியுள்ள அரசியல் மற்றும் வசனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மக்கள் படை எப்படி உருவானது என்று சொல்லப்படும் விதம் சிறப்பாக படம் ஆக்கப்பட்டுள்ளது. பெருமாள் எப்படி வாத்தியாராக உருமாறுகிறார் என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக காட்டியுள்ளனர். விஜய் சேதுபதி இந்த படத்திற்கு தனது 100% உழைப்பை கொடுத்துள்ளார். ஒரு போராளியை தனது நடிப்பால் நம் கண் முன்னே நிறுத்துகிறார். காட்டுக்குள் இவர் கதை சொல்லிக் கொண்டே காவல்துறையினரை கூட்டி கொண்டு செல்லும் காட்சிகள் கைதட்டல்களை பெறுகிறது.
மஞ்சு வாரியருக்கு இரண்டாம் பாகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் மனைவியாகவும் ஒரு புரட்சியாளராகவும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் பாகத்தைப் போலவே சேட்டன் இந்த படத்திலும் அசத்தியுள்ளார். அவரைப் பார்த்தாலே ஒரு வித எரிச்சல் தோன்றும் விதத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ராஜீவ் மேனன், கௌதம் மேனன், இளவரசு ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சூரி சில காட்சிகள் மட்டுமே விடுதலை 2 படத்தில் வந்தாலும், அவர் வரும் காட்சிகளில் கைதட்டல்களை பெறுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அசத்தி உள்ளார்.
விடுதலை 2 படத்தில் பல இடங்கள் டப்பிங்கில் தான் சரி செய்யப்பட்டுள்ளது என்பது படம் பார்க்கும்போது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது. மேலும் ஒரு சில இடத்தில் டப்பிங் சரியாக செய்யப்படவில்லை. இது படத்தில் இருந்தே நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. சூரியை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விஜய் சேதுபதியிடம் மாறி குமரேசன் என்ற கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் இந்த படத்தில் காணாமல் போய் உள்ளது. அதே போல தமிழரசிக்கு என்ன ஆனது என்பதையும் காட்டவில்லை. இளையராஜாவின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலம் தெரிகிறது.
படத்தில் பேசப்பட்டிருக்கும் அதிகப்படியான அரசியல் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது. திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்தாலும் வசனங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு சில இடங்களில் வசனங்கள் தீவிரமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் அவ்வளவு சிறப்பாக இல்லை. வெற்றி மாறனிடம் ஒரு சரியான திட்டமிடல் இல்லாதது விடுதலை 2 படத்தில் நிறைய இடங்களில் தெரிகிறது. முதல் பாகத்தை போலவே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சிறப்பாகவே இருந்தது. விடுதலை 2 படத்திற்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனாலும் திரைக்கதையில் இன்னும் சில மாற்றங்களை செய்திருந்திருக்கலாம்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ