Tirunelveli Court Murder Latest News Update: திருநெல்வேலி மாவட்டத்தின் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர் வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (டிச. 20) காலை வந்திருந்தார். நீதிபதி வருவதற்கு முன்பாகவே வந்த அந்த இளைஞர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாகவே அங்கு வந்து மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி வளைத்துள்ளது. இதை பார்த்து, சுதாரித்துக் கொண்ட மாயாண்டி உடனடியாக அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது.
துடிதுடித்து உயிரிழந்த மாயாண்டி
மாயாண்டியை பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயிலில் வைத்து அவரை சரமாரியாக வெட்டியும் அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் படிக்க | 11 வயதில் இரண்டு முறை சாம்பியன்! பாராட்டி நிதியுதவி வழங்கிய அரசு!
கொலை செய்த அந்த கும்பல் உடனடியாக அங்கு தயார் நிலையில் இருந்த காரிலேயே தப்பித்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முதற்கட்ட விசாரணைக்கு பின்பு மாயாண்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று தனிப்படைகள் அமைப்பு
தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொலை செய்த கும்பலுக்கு தொடர்புடைய ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தப்பியோடியவர்கள் பிடிக்க அவர்கள் சென்ற பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலின் அருகே, அதுவும் நீதிமன்ற வேலைநாளில் இளைஞரை கும்பல் வெட்டியிருப்பது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா செய்தியாளர்களை சந்தித்தார்.
வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு - போலீஸ் விசாரணை
அப்போது அவர்,"இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். காவல்துறையினர் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், அதுகுறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும். இப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழநத்தம் பஞ்சாயத்தில் 2வது வார்டு உறுப்பினராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாமணி (33) என்பவரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள மாயாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் ராஜாமணியின் தம்பி தனது கூட்டாளிகளுடன் சென்று மாயாண்டியை இன்று கொலை செய்துள்ளார் என்றும் இது முழுக்க முழுக்க சாதிய வன்ம படுகொலை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ