நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
தானும் நடிகர் ரஜினிகாந்தும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசியலில் இணைவோம் என்று தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது விமர்சனம் அல்ல நிதர்சனம் என்றும் கூறியுள்ளார்.
அமீபத்தில் நடைபெற்ற கமல் 6௦ நிகழ்ச்சியில், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில் கமலும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், ரசிகர்களை ஏமாற்றிவிடாதீர் என ரஜினிக்கு அறிவுரை வழங்கினார். ரஜினி ஆன்மிக அரசியலை பின்பற்றுவதாக அறிவித்துள்ளார். அது போல் கமலோ பகுத்தறிவு அரசியலை பின்பற்றுகிறார். மாற்று சித்தாந்தங்களை கொண்டிருக்கும் இருவரும் இணைவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்; தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக நானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்த அதிசயம் உண்மைதான் என்றார். படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. நல்ல தலைவராக இருக்கக் கூடிய கோத்தபய நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என்றார் கமல்.
ஓடிஸா பல்கலைக்கழகம் சார்பில் கமலஹாசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, கமலஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.