ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை மீண்டும் பணிக்கு நியமிக்க நடவடிக்கை!!
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் 2,896 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பொறுப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை அவற்றில் நியமிக்க தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது.
முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் ஆயிரம் பேரை மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம் என்றும் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை பணியில் தொடர அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தும் நடவடிக்கை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது அந்தந்த மாவட்டங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், இது தொடர்பாக ஆட்சியர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.