மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு சென்றுள்ளனர். மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள கிழக்கு வாசை பகுதியில் வேலை செய்து வந்த அவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேலை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் அவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும் அது சாத்தியமாகவில்லை.
வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக தமிழக அரசு அறிவித்த இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை அழைத்து வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. அதிகாரிகளிடம் உதவி கேட்ட போது, 216 பேருக்காக தனி தொடர்வண்டி இயக்க முடியாது என்று கூறி விட்டனர். அதைத் தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள தமிழர்களை அழைத்து வருவதற்கான தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான பூஜா குல்கர்னியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏதேனும் பேருந்துகளை ஏற்பாடு செய்தால், அவற்றுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என கூறிவிட்டதாக தெரிகிறது.
வாசை நகரிலிருந்து திருவண்ணாமலைக்கு 216 பேரும் பயணிக்க வேண்டும் என்றால் பேருந்து வாடகையாக மட்டும் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பிழைப்பு தேடி மராட்டியத்துக்குச் சென்று ஊர் திரும்ப வழியின்றி தவிக்கும் ஏழை மக்கள் அவ்வளவு தொகைக்கு எங்கு செல்வர்? திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்ட மக்கள் தங்களின் நிலையை எடுத்துக் கூறி, சொந்த ஊர் திரும்ப உதவும்படி கோரியுள்ளனர். அவரும் பேருந்து வாடகைக்கு நன்கொடையாளரை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது, எப்படி சொந்த ஊருக்கு திரும்புவது என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
அவர்கள் தங்கியுள்ள வாசை நகரம் நெரிசல் மிகுந்ததாகும். அதுமட்டுமின்றி அப்பகுதியை உள்ளடக்கிய பால்கர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் அவர்கள், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து விடும் என்றும், அவ்வாறு நடந்தால் அவர்களின் உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே, அவர்களை அடுத்த சில நாட்களில் அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல், மும்பை மாநகரின் மாஹிம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசை அமைத்து தங்கியுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்களும் தங்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்படி தமிழக அரசை வேண்டியுள்ளனர். மும்பையில் அடுத்த சில நாட்களில் பருவமழை தொடங்கி விடும் என்பதால், உடனடியாக அவர்களை மீட்காவிட்டால் மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடும். திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தங்கியிருக்கும் வாசை நகரம் மும்பையிலிருந்து 70 கி.மீ தொலைவில் தான் உள்ளது. அதனால் அவர்களை அங்கிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களையும், மும்பையில் ஏற்கனவே தவித்து வரும் 800 பேரையும் தொடர்வண்டி மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க முடியும். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
அதிகாரிகள் நிலையில் பல முறை வலியுறுத்தியும் மராட்டியத்தில் வாழும் மக்களை மீட்டு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களே நேரடியாக தலையிட்டு, மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.