பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய கவிதைகளை, 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற பெயரில், ராஜலட்சுமி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
ரூபா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த நுால் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பங்கேற்றனர்.
அந்த நுாலை வெளியிட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நூலின் பிரதியை வெளியிட கவிஞர் வைரமுத்து பிரதியை பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களுக்கு என்ன தேவையோ அதை, ஆடம்பரமின்றி அமைதியாக செய்பவர், பிரதமர் மோடி. அவரின் கவிதைகள் அர்த்தம் நிறைந்தவை. அவரது 'முயற்சி' என்ற கவிதை, சிறந்த தலைவருக்கு உரிய குணத்தை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பேசிய கவிஞர் வைரமுத்து,
மோடி, தாய் மொழியில் கவிதை எழுதியதை நான் வரவேற்கிறேன். இந்நுால் அரசியல், மதம் ஆகியவற்றை கடந்து, மனிதாபிமானத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.