தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் SSLC பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 9,97,794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான SSLC பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும்.
மேலும் மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு SSLC பொதுத்தேர்வினை 9,59,618 மாணவ, மாணவிகளும், 38,176 தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர்.
இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.
தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்வின் போது சோதனைக்கு வரும் பறக்கும் படையினர் மாணவியரை தொட்டு ஆடைகளை சோதனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வறைகளில் மாணவர்கள் தங்கள் ஆடைகளில், துண்டு சீட்டுகளை மறைத்து வைத்து, காப்பியடிக்க முயற்சிக்கின்றனரா இல்லையா என, பறக்கும் படையினரும், தேர்வு கண்காணிப்பாளர்களும் சோதனை செய்கின்றனர்.
இதேப்போல் மாணவியர் மட்டுமே உள்ள தேர்வு மையங்களில், பறக்கும் படையில் உள்ள, பெண் ஆசிரியர், மாணவியர், துண்டு சீட்டு வைத்துள்ளனரா என, ஆடைகளை சோதனை செய்வதாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்த சோதனைகளால், பல மாணவியர் மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும், அவமானமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, 'மாணவியர் உடலை தொட்டு, ஆடையை சோதனை செய்ய வேண்டாம். அவர்கள் காப்பி அடித்தால், ஆதாரத்துடன் சிக்க வைக்கலாம். மாறாக, சந்தேகத்துடன் அவர்களை சோதிக்க வேண்டாம்' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.