கந்தசஷ்டி கவசம் கருப்பர் கூட்டம் யுடியூப் சர்ச்சை குறித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்..!
எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் திடீர் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பான புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதில், வேளச்சேரி செந்தில்வாசன்(49), நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேந்திர நடராஜன் அளித்த தகவலின் படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தி நகர் நியூ போக் சாலையில் உள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றினர். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர். இதனிடையே கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினர். இந்த சர்ச்சை தமிழகத்தில் பெரும் அதிர்வாலையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!!" என குறிப்பிட்டுள்ளார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020