தமிழ்நாடு பட்ஜெட்: இதில் மட்டுமே சிறப்பாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் வார்த்தை ஜாலத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளதாகவும், வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2024, 03:45 PM IST
  • தமிழ்நாடு கடன் வாங்குவதில் மட்டுமே வளர்ச்சி
  • மக்களுக்கான திட்டங்கள் ஏதும் அறிவிப்பில் இல்லை
  • எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாடு பட்ஜெட்: இதில் மட்டுமே  சிறப்பாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி title=

2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பின்னர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " நான்காவது முறையாக திமுக அரசு இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த பொழுது ஏழை மக்களுக்கு பசியை போக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

3 ஆண்டுகளாக மாநகராட்சி உட்புறசாலைகள் சீர் செய்யப்படவில்லை. கிராமப்புற சாலைகளை சீர் செய்ய ஆயிரம் கோடி தான் ஒதுக்கி உள்ளனர். இந்த பட்ஜெட்டில் புதிதாக தடுப்பணைகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை" என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும், அதுபோல் தான் இந்த பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி உள்ளது என தெரவித்தார். மேலும், 8,33,367 கோடி கடன் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் உள்ளது, ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் அன்று தமிழ்நாட்டை கடனாளி ஆக்கி விட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்ச்சித்தார் என எடப்பாடி பழனிசாமி கூறினார். 

மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?

கடன் மேலாண்மையை சரி செய்ய நிபுணர் குழு அமைத்தால் இப்பொழுது அந்த குழுவை தேட ஒரு குழு போட வேண்டும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிதிநிலை வரவு செலவு திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளது என்றும், முழுமையாக அவை என்ன என்பதை அறிக்கையில் குறிப்பிடுகிறேன் என்றும் கூறினார். " தேன்கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். இரண்டும் அவற்றுக்கு உழைத்தவர்களுக்கு பயன் தருவதில்லை. கனவு பட்ஜெட், கானல் நீர் மக்களுக்கு பயன் தராது.

இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து வருடா வருடம் கடன் பெற்று தான் இந்த அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தமிழக அரசு அனைத்திலும் நம்பர் ஒன் என்று தெரிவிக்கிறது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. ஜி எஸ் டி, பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டுக்கு அதிக வருமானம் வருகிறது. அதிமுக ஆட்சியை விட இப்பொழுது அதிக வருமானம் வருகிறது.

ஆனால் எந்த திட்டங்களும் முறையாக அறிவிக்கப்படவில்லை. தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனங்கள், அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம். அதிக திட்டங்களை கொண்டு வந்து அதிக சாலைகளை அமைத்துக் கொடுத்தோம். இப்பொழுது என்ன புதிய திட்டங்கள் உள்ளது பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை ஒன்றுமே இல்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஆயிரம் கோடியில் இருந்து 600 கோடியாக குறைத்துள்ளனர். நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நிறுத்தி அதற்கு செலவழித்து நிதியை நிறுத்தி அதற்கு வேறு பெயர் கொடுத்து வேறு திட்டத்திற்கு செயல்படுத்துகிறார்கள்.

2021-22 இல் புதிய பேருந்துகள் வாங்குவதாக சொன்னார்கள், அடுத்த ஆண்டும் அதையேதான் சொன்னார்கள், அடுத்த ஆண்டும் இதைத்தான் சொல்வார்கள் இது ஏட்டு அளவில் தான் இருக்கும் நடை முறைக்கு வராது. யார் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைமைதான் இருக்கிற நிதியை வைத்து யார் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதுதான். நாங்கள் கொண்டு வந்த உயர்ந்த நிலையை தான் தமிழகத்தில் இப்பொழுது தக்க வைத்து வருகிறார்கள். அதையே சில நேரங்களில் அவர்களால் செய்ய முடியவில்லை.

2035-ல் அடைய வேண்டிய இலக்கை 2019 இல் ஏற்படுத்தினோம். கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அதிமுக நடவடிக்கை எடுத்தது. கற்போர் எண்ணிக்கை உயர்ந்தது. வார்த்தை ஜாலத்தில் நன்றாக உள்ளது நடைமுறைக்கு வந்தால் தான் பயன் அளிக்கும். இந்த ஆட்சி வந்த பிறகு என்னென்ன தொழில் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை.

கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்து இளைஞர்களிடம் வாக்குகளை பெற்று விட்டு இன்றுவரை அதை செய்யவில்லை" என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்க | TN Budget 2024 Highlights:தமிழகத்தில் வரப்போகும் மாற்றங்கள் என்ன? எந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News