காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீரின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து தமிழக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டதோடு, இதன் பிறகு இந்த வழக்கில் எந்த வித மேல்முறையீடும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்கப்பட்ட உத்தரவை விட, தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
மேலும், கர்நாடகத்திற்கு 14 டிஎம்சி கூடுதலாக வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
1924-ம் ஆண்டு வரை 575 டி.எம்.சி காவிரி தண்ணீரை தமிழக விவசாயிகள் பயண்படுத்தி வந்துள்ளனர். வரும் காலத்தில் கர்நாடக அரசு தண்ணீரின் அளவை குறைத்து கொண்டே வந்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ் தேசிய பேரியக்கம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சார்பில் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், புதிய அணைகள் கட்டக் கூடாது என்ற தீர்ப்பை வரவேற்கிறோம். 14.75 டி.எம்.சி குறைத்து வழங்கபட்ட தீர்ப்பைத் தமிழகத்துக்கு இழைக்கபட்ட அநீதி. இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் வழங்கியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக 7 நீதிபதிகள் கொண்ட முழு அரசியல் சாசனத்தின் படி மீண்டும் மேல் முறையீடு செய்ய வேண்டும்
மேலும், தற்போதைய அரசுக்கு தமிழக விவசாயிகள் மீதும், காவிரி நதி நீர் விவகாரத்திலும் எந்த அக்கறையும் இல்லை. அதனால் தான் தமிழகத்திற்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.