சென்னை ஐகோர்ட் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா இன்று தொடங்கியது.
விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பிறகு சென்னை ஐகோர்ட் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் 1892-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி முடிவடைந்தது. அப்போதைய கவர்னரின் உத்தரவுப்படி ஐகோர்ட் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், இன்று சென்னை ஐகோர்ட் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா துவங்கியது. இந்த விழாவில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அப்போது, ரூ.,1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஆர்.பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும் பங்கேற்றனர்.