சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்குப்பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அதனை தீர்த்து வைத்து மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பது தான் மக்கள் நல அரசு.
மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நெடுவாசல் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். விவசாயம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமல்ல தமிழ்நாடே கொதித்தெழுந்து எதிர்க்கத் தொடங்கியிருக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் எதிர்ப்பின் நியாயத்தைக் கருத்தில் கொண்டு இந்தத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.