தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 396-யின்படி குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமாக சரக்குகளை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதவது
"தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989, விதி 396ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரும்புகம்பி/இரும்பு ஆங்கிள்/தகடுகள் மற்றும் இதுபோன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதன் பின்புறம் வாகனத்தின் அளவைத் தாண்டி சரக்குகளை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ வாகனத்தின் அளவைத் தாண்டி சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தால் சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துக்களை ஏற்படுத்தி, விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன. சமீபத்தில் 14.07.2017ம் நாளன்று திருச்சி - தஞ்சாவூர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் வல்லம் என்ற இடத்தில் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் மீது அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மோதி 11 நபர்கள் உயிரிழந்தனர். இப்பொருள், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் 22.08.2017ம் நாளன்று நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் இதுபோன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை தீவிரவாகன தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989, விதி 396ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சாலைகளில் செல்வதை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதற்கிணங்க இவ்வாறாக விதியினை மீறிச் செல்லும் வாகனங்கள், உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு காரணமாக இருப்பின் சரக்கு அனுப்புபவர், சரக்கு பெறுபவர் மற்றும் ஓட்டுநர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடர காவல் துறைக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது."
என தெரிவித்துள்ளது.