செவித் திறன் மீட்கும் அறுவை சிகிச்சை: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

Updated: Jun 13, 2017, 02:08 PM IST
செவித் திறன் மீட்கும் அறுவை சிகிச்சை: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்
Pic Courtesy : www.tn.gov.in

காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200-வது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டினை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழை எளியமக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. உயர்தர சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் புரட்சித் தலைவி அம்மாவால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.57 கோடி மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிறக்கும் போதே வாய் பேச முடியாத செவித்திறன் இழந்த குழந்தைகளுக்கு செவித் திறனை மீட்க 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எவ்வித கட்டணமுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. 

இதுவரை 220 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 2856 குழந்தைகளுக்கு காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செவித் திறன் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200-வது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டினை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். 

இப்பணியினை சிறப்பாக செயல்படுத்தி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார் முதலமைச்சர் கே. பழனிசாமி. 

இதனைத் தொடர்ந்து, சென்னை, அரசு பொது மருத்துவமனையில் புரட்சித் தலைவி அம்மாவால் துவக்கி வைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை ஏழை எளிய மக்கள் பாராட்டிடும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.