அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதுக்குரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழகத்திற்கு சொந்தமான நான்கு அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் அணைகள் பாதுகாப்பு சட்ட முன்வரைவை அடுத்த மாதம் 11&ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே தொடங்கி விட்டன. இதற்கான வரைவு சட்ட முன்வரைவை 2010-ஆம் ஆண்டில் தயாரித்த அப்போதைய மன்மோகன்சிங் அரசு, அது குறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்டது. அந்த சட்ட முன்வரைவுக்கு அப்போதே தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட இம்மசோதா, பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு கட்டத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்த சட்டமுன்வரைவை கைவிடுவதாக அறிவித்தது.
ஆனால், 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு, மீண்டும் அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறது. இத்தகைய சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், கடந்த ஜுன் 13&ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டன. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் இத்தகைய உணர்வுகளை மதிக்காமல் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பது சர்வாதிகாரம் ஆகும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
அணைகள் பாதுகாப்புச் சட்டம் அணைகள் மற்றும் ஆறுகள் மீதான உரிமைகளை பறிக்கும் செயல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரு மாநிலத்தில் ஓர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை அந்த மாநிலத்திற்கே சொந்தமானது; அவற்றை பராமரிக்கும் அதிகாரமும், உரிமையும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கே சொந்தமானது என இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முல்லைப் பெரியாறு மீதான தமிழகத்தின் உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டு விடும். முல்லைப் பெரியாறு அணை கேரளத்தில் அமைந்திருந்தாலும் அந்த நீரை பயன்படுத்துவது தமிழகம் தான் என்பதால், அது குறித்த இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி அந்த அணையை பராமரிக்கும் பொறுப்பு தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு கேரளத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் அந்த அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது கனவாகவே போய்விடும். அதுமட்டுமின்றி, முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று கூறி அதை தகர்ப்பதும் கேரள மாநில அரசுக்கு மிகவும் எளிதாகி விடும்.
முல்லைப்பெரியாறு அணை மட்டுமின்றி, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மேலும் 3 அணைகளை பராமரிக்கும் அதிகாரமும் கேரளத்துக்கு தாரை வார்க்கப்படும். இது தமிழக நலனுக்கு நல்லதல்ல. அதுமட்டுமின்றி, மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு அளிக்க இச்சட்ட முன்வரைவில் வகை செய்யப்பட்டிருக்கிறது தமிழக அரசின் அதிகார வரம்பில் தலையிடும் செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய சட்ட முன்வரைவை திணிக்கக் கூடாது. உடனடியாக இந்த முன்வரைவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.