பொள்ளாச்சி கொடூரம் சம்பவம் குலை நடுங்கச் செய்கிறது: வைகோ வேதனை

பொள்ளாச்சி கொடூரம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2019, 09:28 AM IST
பொள்ளாச்சி கொடூரம் சம்பவம் குலை நடுங்கச் செய்கிறது: வைகோ வேதனை title=

பொள்ளாச்சி கொடூரம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்த சம்பவத்தை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத, நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவங்கள், பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவிகளை, வேலைக்குச் செல்லும் இளம் பெண்களை நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக நடித்து, காதல் வலையில் ஏமாற்றி வீழ்த்தி, சின்னப்பாளையம் பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களைக் கதறக் கதற நாசமாக்கிய மிருக வெறி பிடித்த காமுகர் கூட்டத்தின் அக்கிரமச் செயல்கள், காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்த பயங்கரச் செய்தி, உள்ளத்தை உறைய வைக்கின்றது.

அந்தக் காட்சிகளைக் காண முடியாது. அந்தப் பெண்களின் அலறல் குரலைக் காது கொடுத்துக் கேட்டால், நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது. நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், சிறுமிகளை இந்தக் கும்பல் சீரழித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இப்பெண்களும், அக்குடும்பத்தினரும், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று பதறுகின்றார்கள்.

அவர்கள் இதுவரை வாழ்ந்த வந்த பகுதியில் இனி எப்படி அவர்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும்? ஐயோ, நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகின்றது.

மிருகங்களை விடக் கொடிய இப்பாவிகளைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களை, வெளிப்படையான விசாரணைக்கு ஆளாக்காமல், அவர்களுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்படாத வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த நாசக்காரர்களைப் பாதுகாக்க, ஆளுங்கட்சியின் கரங்கள் நீளுகின்றன என்ற செய்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. இந்த இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களைப் பாதுகாக்க முனைந்தவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் அனைவரும், சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்; கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

தக்க நடவடிக்கையை அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாவிடில், அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை இயக்கங்களும் கிளர்ந்து எழுவார்கள். குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன்!

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Trending News