ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் SC-ல் கேவியட் மனு...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்....

Updated: Dec 17, 2018, 12:28 PM IST
ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் SC-ல் கேவியட் மனு...
File Pic

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்....

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மே 22 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை தருண் அகர்வாலா குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது.

மேலும், வேதாந்தா நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமத்தை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கவும் உத்தரவிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி, வேதாந்தா நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.