வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் (Government School) மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி (Vellore district collector V.R.Subbulaxmi I.A.S) இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?, கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் என்ன? தோல்வி அடைந்த மாணவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டார். பின்னர் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அங்குள்ள அறை ஒன்றில் ஆசிரியர்கள் அனைவரும் அமர வைக்கப்பட்டனர். அங்கு கலெக்டர் சுப்புலெட்சுமி சென்று, அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் அப்போது அவர் ஆசிரியர்களிடம் கூறியதாவது:- இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கும். அதனால் அவன் படிக்காமல் இருக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் எப்படியாவது படித்து விடுவார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களை நீங்கள் தங்கள் குழந்தைகளாக பாவித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் நான் விடமாட்டேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அழைத்து கேள்வி கேட்பேன். மதிப்பெண் குறைந்து வாங்கும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் எந்த கேள்விகள் அதிகமாக கேட்பார்கள் என்று அறிந்து அதை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டும், காணாமல் விட்டு விடக்கூடாது.
நாம் அனைவரும் நமது கடமையை செய்ய வேண்டும். அதற்கு தான் அரசு நமக்கு ஊதியம் வழங்குகிறது. வேலூர் மாவட்டத்தை 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் சமையல் கூடம், கழிவறை போன்ற இடங்களுக்கு சென்று முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது கழிவறை மிகவும் மோசமாக இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளை, ஊரை சுத்தம் செய்கிறீர்களோ இல்லையோ, முதலில் பள்ளியை சுத்தமாக வைக்க வேண்டும். முறையாக சுத்தம் செய்யவில்லை என்றால் மெமோ வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து 10-ம், 12-ம் வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் தேர்வை கண்டு அஞ்சக் கூடாது. தேர்வுக்கு தயாராகி சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும். பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்கள் அழைத்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தேர்வு முடிந்த பின் உங்களை சந்திப்பேன் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆகப் போகிறீர்கள்? என்று கேட்டு கலந்துரையாடினார். சிறந்த மாணவர்களை அழைத்து பாராட்டினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, தாசில்தார் நெடுமாறன் பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ