தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Last Updated : Oct 4, 2019, 01:33 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு! title=

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நாளை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ள 1.45 லட்சம் வாக்கு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News