கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
இது குறித்து அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.... கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் காரணமாக அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருக்கிறார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
‘‘கொரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டதாலும் தானி, மகிழுந்து உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் இயக்கம் முழுமையாக முடங்கி விட்டன. மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட பலர் அன்றாட செலவுகளுக்கே பணமின்றி தவித்து வருகின்றனர். ஆகவே அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்றும், சூழலை புரிந்து கொண்டும் அனைத்து வங்கிக் கடன்களையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த ரிசர்வ் வங்கி ஆளுனரின் அறிவிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. பொதுத்துறை, தனியார் துறை சார்ந்த அனைத்து வணிக வங்கிகள், மண்டல மற்றும் ஊரக வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கிகளில் பெறப்பட்ட, அனைத்து வகையான கடன் தவணைகளும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப் படுகின்றன. 3 மாத காலம் முடிவடைந்தவுடன் கடன் தவணை மீண்டும் தொடங்கும். அப்போது அந்த மாதத்திற்குரிய தவணையை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒத்திவைக்கப்பட்ட 3 மாதங்களுக்கான தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு வசதியாக கடன் தவணைக் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒத்திவைக்கப்பட்ட 3 மாத கடன் தவணைக்காக வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 3 மாதங்களுக்குப் பிறகு, 3 தவணைகளையும் மொத்தமாக கட்ட வேண்டியிருக்குமோ? இதற்காக வட்டி வசூலிக்கப்படுமோ? என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாததற்காக, அவர்களின் கடன் பெறும் மதிப்பு (Credit Score) குறைக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது கூடுதலாக வரவேற்கப்பட வேண்டியதாகும். அதேநேரத்தில் கடன் அட்டைக்கான நிலுவைத் தொகையை காலம் சார்ந்த கடனாக கருத முடியாது என்பதால், அவற்றுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார். கடன் அட்டை மூலம் குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏராளாமானோர் வாங்கி வருகின்றனர் என்பதாலும், அவர்களிடம் நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த பணம் இல்லை என்பதாலும் அந்தக் கடனையும் 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியும், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள பணத்திற்கான வட்டியும் 0.75 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனக்கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடி கணிசமாக குறையும். அதேநேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகளுக்கு வட்டியை குறைக்க கூடாது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பல பள்ளிகள் அடுத்த மாதம் முதல் கல்விக்கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பெற்றோரால் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது. எனவே, கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.