போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.....
ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த 422 பணியிடங்களும் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, இன்று மாலைக்குள் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது , இந்த 422 இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு திரும்பிவரும் பட்சத்தில் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடம் பணியிடமாற்றம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களை எப்படியாவது வேலைக்கு திருப்பி வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.