அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் சீறிப்பாய்ந்தது GSAT-11.....

இணையதள வேகத்தை அதிகரிக்கப் பயன்படும், GSAT-11 செயற்கைக்கோள் ஏரியான்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Updated: Dec 5, 2018, 10:46 AM IST
அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் சீறிப்பாய்ந்தது GSAT-11.....

இணையதள வேகத்தை அதிகரிக்கப் பயன்படும், GSAT-11 செயற்கைக்கோள் ஏரியான்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக 40 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடிய, 5 ஆயிரத்து 854 கிலோ எடைகொண்ட GSAT-11 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ளது.

இந்நிலையில், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கோரு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இன்று அதிகாலை 2.08 மணிக்கு GSAT-11 மற்றும் தென்கொரிய செயற்கைக்கோளுடன் ஏரியான்- 5 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின் GSAT-11 செயற்கைக்கோள் பிரிந்து சென்று புவிவட்டப் பாதையில் இயங்கத் தொடங்கியது. அதிவேக இணையதள பயன்பாட்டுக்காகவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார். 

மின்னணு வங்கி சேவை, மின்னணு சுகாதாரப் பணிகள்,மின்னணு தொழில்நுட்பம் போன்றவற்றுக்கும் இந்த செயற்கைக்கோள் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6A செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது. 

இதையடுத்து, ஜூன் மாதமே விண்ணில் ஏவப்பட இருந்த GSAT-11 செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர். இந்நிலையில் GSAT-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.