புதுடெல்லி: உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம். தாலிபான்கள் பொறுப்பேற்றதிலிருந்து சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருவதை அநாட்டு மக்களின் வலியும் வேதனையும் நிறைந்த பதிவுகளால் உணர முடிகிறது. தலிபான்களால் ஆஃப்கன் கைப்பற்றப்பட்ட பிறகு, அவர்கள் என்னையும், என்னைப் போன்ற மற்றவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள் பல பிரபல பெண்கள். அவர்களில் முக்கியமானவர் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஜரிஃபா கஃபாரி.
தாலிபான்களின் கடந்த காலக் கதைகள் மற்றும் அவர்களின் மிருகத்தனமான செயல்பாடுகளின் நினைவுகளால் மக்கள் மனமுடைந்து போயிருக்கின்றனர். மக்களின் கையறுநிலை, விமானத்தின் டயர்களில் ஒளிந்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் பயங்கரமான முடிவையும் எடுக்கச் செய்துள்ளது. இதில் உள்ள ஆபத்து தெரிந்தாலும், உயிர் போனாலும் பரவாயில்லை, தாலிபன்களிடம் சிக்கி சீரழியவேண்டாம் என்ற மக்களின் மனோபாவத்திற்கு முக்கியமான காரணம் தாலிபன்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் அவர்கள் ஆட்சியை பிடித்த விதம் என்று கூறலாம். ஆனால் இப்போது ஆப்கானியர்களின் கண்ணீருக்கு மதிப்பு இல்லை என்பதுதான் கொடூரமான உண்மை.
தலிபான்கள் எவ்வளவு வெறித்தனமானவர்கள் மற்றும் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் புரிந்துக் கொள்ள முடியாது. இரக்கமற்ற தாலிபான்கள் மீதான அச்சத்தை ஓரளவு தெரிந்துக் கொள்ள சில பெண்களின் கருத்துக்களில் இருந்தே தெரிந்துக் கொள்ள முடியும். மில்லியன் கணக்கான ஆப்கானியர்களின் வலியின் ஒரு சிறு துளியை வெளிப்படுத்தும் இந்த பெண்கள், யாராவது முன் வந்து அவர்களை காப்பாற்றுவார்கள் என்ற ஒரே நம்பிக்கையுடன் இறுதிவரை போராட முடிவு செய்துள்ளனர்.
Also Read | ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி; ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
சஹாரா கரிமி (Sahara Karimi)
திரைக்கதை எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சஹ்ரா கரிமி, ஆப்கானிஸ்தான் திரைப்பட சம்மேளனத்தின் இயக்குநர் ஜெனரலாகவும் உள்ளார். அவர், உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'எனக்கு இந்த உலகத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை, இங்கு நடக்கும் கொடுமைகளைப் பார்த்து உலகம் ஏன் அமைதியாக இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் என் நாட்டிற்காக நின்று போராடுகிறேன், ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு உங்களை போன்ற கூட்டாளிகளின் உதவி தேவை. எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுங்கள், எங்களுக்கு உதவுங்கள். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து உங்கள் நாட்டின் மிக முக்கியமான ஊடகங்களுக்கு தகவல் கொடுத்து எங்களுக்கு உதவுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
اعلامیه دکتر صحرا کریمی، رییس افغان فلم در مورد موقف و سمت کاری اش به عنوان کارمند رسمی وزارت اطلاعات و فرهنگ. pic.twitter.com/xpZNsdy7nv
— Sahraa Karimi/ صحرا كريمي (@sahraakarimi) August 16, 2021
மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai)
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டு நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம் என்று மலாலா ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும், உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும், அகதிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று மலாலா கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) ஏற்கனவே தலிபான்களின் இலக்காக இருந்தவர். தாலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக மலாலா பாகிஸ்தானை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. உண்மையில், மலாலா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பலர் ஆப்கானிஸ்தானின் நிலைமையைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்
நஜ்மா கரிமி (Najma Karimi)
தலிபான்களின் அராஜகத்தில் இருந்து விலக வேண்டும் என்பதற்காகவே, நசீரா கரிமி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். அமெரிக்காவில் வசிக்கும் அவரிடம் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவளிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, அவரால் தன்னுடைய வலியை மறைக்க முடியவில்லை. அவர் பல பதில் கேள்விகளை எழுப்புகிறார். அதிபர் அஷ்ரப் கானி எங்கே? 'நான் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவள், இன்று நான் மிகவும் சோகமாக இருக்கிறேன், ஏனென்றால் தாலிபன்கள், நாட்டை பிடித்துவிடுவார்கள் என்று பெண்கள் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் எங்கள் கொடியை அகற்றி தங்கள் கொடியை வைத்தனர். மக்கள் அனைவரும் சோகமாக இருந்தாலும், குறிப்பாக பெண்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. 'ஆப்கானிஸ்தான் மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கரீமி கூறினார். பெண்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அஞ்சுகின்றனர். எனக்கு ஏற்பட்ட இன்னல்களால் நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்களின் நிழலில் இருந்து வெளியே வந்தேன். அதிபர் அஷ்ரப் கானி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று நஜ்மா கரிமி சொல்கிறார்.
Also Read | ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்
ஜரிஃபா கஃபாரி (Zarifa Ghafari)
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஜரிஃபா கஃபாரி, தலிபான்கள் நாட்டை பிடித்த பிறகு, என்னையும் என்னைப் போன்ற மற்றவர்களையும் தலிபான்கள் வந்து கொல்ல காத்திருக்கிறேன் என்று கூறினார். தனக்கு, தன்னுடைய குடும்பத்தினருக்கும் உதவ இங்கு யாரும் இல்லை என்று கூறிய அவர், தனது அடுக்குமாடி அறையில் தலிபான்களுக்காக காத்திருப்பதாக ஒரு பேட்டியின் போது ஜரிஃபா கூறினார்.
நான் என் குடும்பம் மற்றும் கணவருடன் அமர்ந்திருக்கிறேன். தாலிபன்கள், என்னையும் என்னைப் போன்றவர்களையும் கொன்றுவிடுவார்கள். என்னால் என் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நான் எங்கு செல்வது? இதை சொன்ன பிறகு மேற்கொண்டு ஜரிஃபாவால் பேச முடியவில்லை.
27 வயதான ஜரிஃபா கஃபாரி, ஆப்கானிஸ்தானின் மைதான் வார்டக் மாகாணத்தில் (Maidan Wardak province) இருந்து முதல் பெண் மேயராக 2018 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானின் மிகவும் இளம் வயதியில் மேயரானவர் ஜரிஃபா கஃபாரி தான்.
My dear homeland,
I know you are suffering and in pain
I know it is hard for you because strangers burn you and seek your destruction
But your real children who are looking to build you are very hard but with full courage trying to pull you out of these bad days pic.twitter.com/paQh0Nry4f— Zarifa Ghafari (@Zarifa_Ghafari) August 14, 2021
சமூகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல பெண்கள் தலிபான்களின் இந்த மதவெறி மற்றும் அச்சுறுத்தலில் இருந்து ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற சமூக ஊடகங்கள் மூலம் உதவி கோரியுள்ளார்.
22 வயதான ஆயிஷா குர்ராம், சமீபத்தில் காபூல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், ஆப்கானிஸ்தானின் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு அற்புதமான கனவைக் கண்டதாகக் கூறுகிறார். நாங்கள் ஒரு நல்ல நாளை நோக்கி நகர்கிறோம். ஆனால் நாங்கள் மீண்டும் பழைய சகாப்தத்திற்கு திரும்பிவிட்டோம் என்று வேதனை தெரிவிக்கிறார்.
33 வயதான புகைப்படக் கலைஞர் ரடா அக்பர் கூறுகையில், இப்போது என் கண்ணீர் நிற்கவில்லை. ஆப்கானிஸ்தான் என் கண்முன்னே அழிக்கப்படுவதைக் கண்டும், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆப்கானிஸ்தானின் அழகான மக்களைக் காப்பாற்றுமாறு நான் உலகிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read | "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR