வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள் - என்ன பிரச்னை?

Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 20, 2024, 09:49 AM IST
  • இவர்கள் அனைவரும் தரைவழியாக நாடு திரும்பியிருக்கின்றனர்.
  • வடகிழக்கு பகுதியின் இரண்டு எல்லைகளை இவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
  • இதில் பெரும்பாலானோர் அங்கு மருத்துவக் கல்வியை பயில்கின்றனர்.
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள் - என்ன பிரச்னை? title=

Bangladesh Violent Protests Latest News Updates: வங்கதேசத்தில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் கலவரம் என்பது அங்குள்ள பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மாணவ அமைப்புகளுக்கும், அரசின் பாதுகாப்பு படைகளுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெறும் இந்த கலவரத்தால் உள்நாட்டு அமைதி சீர்குலைந்துள்ளது. இந்த கலவரத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக் ஹசீனா நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 

இட ஒதுக்கீடு சர்ச்சை

வங்கதேசம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு உச்சம் பெற்றது. 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போரின் தியாகிகள் மற்றும் போராடியவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதித்து கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் மாணவ அமைப்புகளும், இளைஞர்களும் போராட்ட களத்தில் குதித்தனர். இவர்களுக்கு எதிராக அரசு ஆதரவாளர்களும் களத்திற்கு வந்து வன்முறையில் இறங்க, இவர்களை தடுக்க பாதுகாப்பு படையினரும் அதிரடியில் இறங்கினர். இதனால், நாடு முழுவதும் அமைதியின்மை நிலவுகிறது. 

எதிர்ப்பாளர்களின் கருத்து

இருப்பினும், இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டில் உயர் நீதிமன்ற உத்தரவை வங்கதேச உச்ச நீதிமன்ற தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது, வங்கதேச அரசு இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது வங்கதேச நிறுவனத் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளும், பிரதமருமான ஷேக் ஹசீனாவின் ஆளும் ஆவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே அதிகம் பயனளிக்கும் என எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க |  சவக்கிடங்கான குப்பை கிடங்கு..! நடுங்க வைத்த சைக்கோ கில்லர்

மேலும் கட்சி விஸ்வாசிகளுக்கு பரிசளிக்கும் விதமாக ஷேக் ஹசீனா இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார் என்றும் இதனால் தங்களின் வேலைவாய்ப்புகள் பறிப்போவதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த புதன்கிழமை (ஜூலை 17) அன்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் சேக் ஹசினா போராட்டத்தை கைவிடும்படி இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். இருப்பினும்,  மறுநாள் (ஜூலை 18) பிரதமர் பேச்சை ஒளிப்பரப்பிய அரசின் சேனலின் கட்டடத்தை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவமும் நடந்தேறியது. 

105 பேர் உயிரிழப்பு

போராட்டம் என்பது கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்தாலும் கடந்த திங்கட்கிழமை அன்றுதான் தாக்கா பல்கலைக்கழகத்தில் வெடித்த கல்வரம் மூலம் வன்முறை தீ பரவியது. அதற்கடுத்த நாள் அங்கு 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த பல்கலைக்கழகத்தை மூட அரசு உத்தரவிட்டது. இதுவரை மொத்தம் 105 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லை வழியாக வரும் மாணவர்கள்

இதற்கிடையே வங்கதேசத்தில் வசித்து வரும் சுமார் 300 மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வடகிழக்குப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் எல்லைகளை பயன்படுத்தி நாடு திரும்பியிருக்கின்றனர்.   பெரும்பாலான இந்திய மாணவர்கள் அங்கு மருத்துவப் படிப்பை பயின்று வருகின்றனர். ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் வங்கதேசத்தில் அதிகமாக பயின்று வருகின்றனர். மேகாலயாவில் உள்ள டவ்கி அருகே இருக்கும் எல்லை வழியாகவும், திரிபுராவின் அகர்தலாவுக்கு அருகில் உள்ள அகுரா எல்லை வழியாகவும் மாணவர்கள் நாடு திரும்பினர். இந்த இரண்டு எல்லைகளே மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

பல்வேறு சேவைகள் ரத்து

கலவரம் அடங்கிவிடும் என அங்கேயே தங்கிவிட நினைத்தாலும், இணையம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய சேவைகளை ரத்தானதால் தற்காலிகமாக நாடு திரும்புவதே சிறந்தது என முடிவெடுத்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் தொடர்ந்து மோசமாகி வருவதாகவும், கலவரத்தால் ஏராளமான தடைகள் நிலவுவதால் வீடு திரும்பியிருப்பதாக தெரிவித்தினர். "விமான டிக்கெட்டுகளும் கிடைக்காததால் சாலை மார்க்கமாகவே அகர்தலா வழியாக வீடு திரும்பியதாக ஹரியானாவை சேர்ந்த ஆமிர் என்ற மாணவர் தெரிவித்தார். இவர் சிட்டாகாங்கில் உள்ள மரைன் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு மாணவர் ஆவார்.

மற்ற நாட்டு மாணவர்களும்...

கல்வி நிலையங்கள் நீண்ட நாள்களுக்கு இனி மூடியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால், தூதரகத்தின் அறிவுரையின் பேரில் இவர் நாடு திரும்பி உள்ளனர். அகர்தலா எல்லை வரை டாக்ஸியில் வந்துள்ளனர். டாக்ஸி பயணம், எல்லை நடைமுறைகள் என அனைத்தையும் சேர்த்து 6 மணிநேரத்திற்கும் மேலாக பயணித்து பல மாணவர்க் வீடு திரும்பி உள்ளனர். நாடு திரும்பிய 300 மாணவர்களில் 200 பேருக்கும் மேல் இந்தியர்கள் என்றும் கலவர அச்சத்தால் சில பூட்டான் மற்றும் நேபாள மாணவர்களுக்கு இங்கு தஞ்சம் புகுந்திருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க |  அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவது சந்தேகமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News