மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது. உண்மையில் இதற்கான காரணம் இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி தான். இந்த தேவாலயம் சாண்டியாகோ கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக குறைந்த நீர்மட்டம் உள்ள காலங்களில் ஓரளவு தெரியும். இருப்பினும், வழக்கத்தை விட மிக அதிக வெப்பநிலை நிலவுவதாலும், மழை இல்லாததாலும், அணை வறண்டு போய் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில் நிலவும் கடும் வெப்பம்
1966 ஆம் ஆண்டு அருகில் உள்ள கிரிஜால்வா ஆற்றின் கிளை நதியில் அணை கட்டப்பட்டதில் இருந்து தேவாலய கட்டிடம் முழுவதுமாக நீரில் மூழ்கியது. பல ஆண்டுகளாக, சுற்றுலா பயணிகள் படகு மூலம் தேவாலயத்திற்கு வருகை தந்தனர். அணைக்குள் இருக்கும் சர்ச்சின் கட்டமைப்பு முழுமையாக வெளியே வந்துள்ள நிலையில், மக்கள் இப்போது கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தேவாலயத்தின் வாசலுக்குக் கொண்டு செல்கிறார்கள். அந்த அளவிற்கு நீர் வற்றியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மெக்சிகோ முழுவதும் எட்டு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மோட்டார் சைக்கிளில் தேவாலயத்திற்குச் சென்ற ஜோஸ் எடுவார்டோ ஜியா என்ற உள்ளூர் நபர் ஒருவர் செய்தி சேனலிடம் பேசுகையில், "இத்தனை வறட்சியிலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சிறிய தேவாலயம் இருப்பதைப் பார்ப்பது அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது" என்று கூறினார்.
ஸ்பானிஷ் காலனித்துவ ஆட்சி
இந்த தேவாலயம் 16 ஆம் நூற்றாண்டில் டொமினிகன் ஆர்டர் (DO) என்னும் கிறிஸ்துவ சபை உறுப்பினர்களால் கட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட்ட போது மெக்சிகோவின் பிரதேசம் ஸ்பானிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய கட்டளைகளில் ஒன்றான DO பிரான்ஸில் தொடங்கபட்டது. ஸ்பைன் பாதிரியார் போதகர் டொமினிக் என்பவரால் 1215 ஆம் கிரிஸ்துவ கொள்கைகளை பரப்பவும், மதங்களுக்கு எதிரான கொள்கையை எதிர்ப்பதற்காகவும் நிறுவப்பட்டது. அதன் உறுப்பினர்கள், இன்று 5,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண மக்கள் ஆகியோர் அடக்கம்.
1960 இல் மூழ்கிய தேவாலயம்
ஃபிரியார் பார்டோலோம் டி லா காசாஸ் தலைமையிலான பாதிரியார்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சியாபாஸ் பிராந்தியத்தின் கெச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. 30 அடி உயரம் வரை சுவர்கள் கொண்ட இந்த அமைப்பு 183 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டது. இதன் மணி கோபுரம் 48 அடி உயரம் கொண்டது. 1960 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டதால், இந்த தேவாலயம் தண்ணீரில் மூழ்கியது. பல ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்தாலும், பண்டைய தேவாலயம் அதன் சிக்கலான கட்டிடக்கலை அம்சங்களை குறிப்பிடத்தக்க வகையில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்ததால், திலாப்பியா மீன்பிடியில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளனர். "சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, தண்ணீர் வெகுவாக குறையத் தொடங்கியது," என்கிறார் அப்பகுதி மீனவர் டேரினல் குட்டிரெஸ். அவர், 'எனது குடும்பத்தை நான் எப்படி பராமரிப்ப்து என மிகவும் கவலையாக உள்ளது. வருமானத்திற்கு வழி இல்லை. தற்போது, என்னிடம் எதுவும் இல்லை.' என கவலையும் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் மீனவர்கள்
மெக்சிகோ முழுவதும் தொடரும் வெப்ப அலை
மெக்சிகோவை பாதிக்கும் வெப்ப அலையானது சியாபாஸில் மட்டும் அல்ல. தெற்கில் யுகாடன் மற்றும் வடக்கே நியூவோ லியோன் போன்ற நாட்டின் பிற பகுதிகள் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளன. எப்போதும் இதமான காலநிலை நிலவும் மெக்சிகோ நகரில் கூட கடந்த ஒரு வாரத்தில் 35 டிகிரியை எட்டியுள்ளது.
மேலும் படிக்க | பேட்மிண்டனில் சாதனை! இந்தோனேஷிய ஓபன் கோப்பை வென்ற ரங்கிரெட்டி சிராக் ஜோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ