ராஜஸ்தான், குஜராத் என பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு வயது 75. ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக புகார்கொடுத்த பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரை சேர்ந்த மற்றொரு சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த போது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இநிலையில், மேலும் பல கற்பழிப்பு வழக்கு இவர் மீது பதிவாகியுள்ளது.
ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்
கீழ் கடந்த 31-8-2013 அன்று இவரை போலீசார் கைது செய்தனர். இவரைத ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுதரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு நீதிபதி சென்று நாளை தீர்ப்பளிக்கப்படுவதால் சிறையை சுற்றியும், அருகாமையில் உள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் ஆசாரம் பாபுவுக்கு ஏராளமான பக்தர்கள் இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.