222 இடங்களுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கலும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனை ஏற்க மறுத்த கர்நாடகா ஆளுநர், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நாளை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாஜக இழுப்பதை தடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் நட்சத்திர விடுதியிலும், மஜத எம்.எல்.ஏ.க்கள் கொச்சியிலும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பா.ஜ.,வை சேர்ந்தவர் தலைவர்கள் பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-விடம் ஜனார்த்தனரெட்டி பேரம் பேசிய அந்த ஆடியோவில், பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டால் அமைச்சர் பதவியும், பாஜக-வை சேர்ந்த தேசிய தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாக கூறப்பட்டுள்ளது.