மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கூறிய கருத்து பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்படும் என கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 5, 12, 18, 28 சதவீதம் ஆகிய வரி பிரிவுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீதம் ஆடம்பர பொருட்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பெரும்பாலான பொருட்கள் குறைந்த வரி விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ALSO READ | ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி ₹87,422 கோடி வசூல் : நிதியமைச்சகம் தகவல்
ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கும் வரி வருவாய் குறைந்து விட்டது. எனவே, 2015-16 நிதியாண்டை அடிப்படையாக வைத்து, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
இதன்படி கடந்த 2019-20 நிதியாண்டில் மாநிலங்களுக்கு இழப்பீடாக ₹1.65 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு 2018-19 நிதியாண்டில் ₹69,275 கோடி, 2017-18ம் ஆண்டில் ₹41,146 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடாக வழங்கியுள்ளது.
ஆனால், ஜிஎஸ்டி வருவாய் குறைவதால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகின்றன. கடந்த மாதமும் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது.
கொரோனா பரவலால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது ஒரு புறம் இருக்க, மாநிலங்களுக்கும் வருவாய் குறைந்ததால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கேட்டிருந்தது. இதற்கு, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால், மத்திய அரசு கருவூலத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க செஸ் வரியும் சேர்த்து விதிக்கப்படுகிறது. எனவே, இழப்புக்கு ஏற்ப செஸ் வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கலாம் என கூறியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம், தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வரியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | அரசின் கனவுத் திட்டத்தில் இணைய வரிசை கட்டும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!!
இந்த சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அவரிடம், அட்டர்னி ஜெனரல் கூறியது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.
அதன்பிறகு, அட்டர்னி ஜெனரலிடம் இருந்து சட்ட ஆலோசனை கேட்கப்பட்டது. அதன்படி அட்டர்னி ஜெனரல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதன்மீது மாநில அரசுகளுடன் விவாதம் நடத்த சிறப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.