டாலரின் வரலாறு என்ன? உலகத்தின் முக்கிய நாணயமாக டாலர் இருப்பதன் காரணம் என்ன?

FOREX: Foreign Exchange என்பதன் சுருக்கமே Forex ஆகும். இதுதான் தமிழில் அந்நியச் செலாவணி என அழைக்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2022, 04:30 PM IST
  • உலகம் முழுவதும் உள்ள வங்கிகளின் ஃபாரெக்ஸ் 64 சதவீதம் டாலராகத்தான் உள்ளது.
  • இதற்கு அடுத்ததாக யூரோ உலக அளவில் 19.9 சதவீதம் உள்ளது.
  • உலகளவில் 85 சதவீத வர்த்தகம் டாலர் வடிவில் நடைபெறுவதால், டாலர் சர்வதேச வர்த்தகத்தில் இன்றியமையாததாக உள்ளது.
டாலரின் வரலாறு என்ன? உலகத்தின் முக்கிய நாணயமாக டாலர் இருப்பதன் காரணம் என்ன? title=

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது என்ற செய்தியை அடிக்கடி காண நேர்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்றால் என்ன? இது எதனால் நேர்கிறது? இது குறித்த விவரங்களை இந்த பதிவில் விவரமாக காணலாம். 

Forex

Foreign Exchange என்பதன் சுருக்கமே Forex ஆகும். இதுதான் தமிழில் அந்நியச் செலாவணி என அழைக்கப்படுகிறது. 

எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாட்டிடம் உள்ள பிற நாடுகளின் பணமே Forex அதாவது அந்நியச் செலாவணி ஆகும். உதாரணத்திற்கு இந்தியாவின் இருப்பில் உள்ள டாலர் போன்ற  வெளிநாட்டுப் பணமே இந்தியாவின் Forex ஆகும். பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், ஃபாரெக்ஸ் கையிருப்பே இந்தியாவிற்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. 

ஃபாரெக்ஸ் இருப்பை 3 விதமான கூறுகளால் கணக்கிடலாம்: 

- முதலாவது, Foreign Currency Assets (FCA)  எனப்படும் வெளிநாட்டு நாணய சொத்துக்கள். வெளிநாட்டு நாணய சொத்துக்கள் என்பது பிறநாட்டின் பத்திரங்களில் முதலீடு செய்வதே ஆகும். இந்தியா தனது வெளிநாட்டு நாணய சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கை, அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது.  

- இரண்டாவது தங்கம். 

- மூன்றாவது International Monetary Fund IMF எனப்படும் சர்வதேச நாணய  நிதியம். 

உலகம் முழுவதும் உள்ள வங்கிகளின் ஃபாரெக்ஸ் 64 சதவீதம் டாலராகத்தான் உள்ளது. இதற்கு அடுத்ததாக யூரோ உலக அளவில் 19.9 சதவீதம் உள்ளது. உலகளவில் 85 சதவீத வர்த்தகம் டாலர் வடிவில் நடைபெறுவதால், டாலர் சர்வதேச வர்த்தகத்தில் இன்றியமையாததாக உள்ளது. உலக அளவில் டாலர் இந்த அளவிற்கு சக்தி மிக்க நாணயமாக மாறியது எப்படி?

டாலரின் வரலாறு

இரண்டாம் உலகப்போரின் போது கூட்டணி நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் அமெரிக்காவே முக்கியப் பங்கு வகித்தது. இதில் பல்வேறு நாடுகள் தங்களது சொந்த நாணயங்களைக் கொண்டிருந்ததால், ஆயுதங்களுக்குப் பதிலாக அமெரிக்காவுக்குத் தங்கத்தை வழங்கின. இதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலகிலுள்ள பெரும்பான்மையான தங்கம் அமெரிக்காவின் வசம் வந்தது. 

உலக நாடுகள் தங்களது தங்க இருப்பை மீண்டும் பெறுவதும் அசாத்தியமானதாயிற்று. இந்தப் பிரச்சனைக்கு எந்த நாட்டையும் பாதிக்காத வகையில் தீர்வு காண, 1944-ம் ஆண்டு அமெரிக்காவில் 44 நாடுகள் கூடி விவாதித்தன. இந்த மாநாடு,  பிரிட்டன் உட்ஸ் மாநாடு என அழைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் முடிவில் தான், உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் உருவாகின.

மேலும் படிக்க | LPG Gas விலை குறையும்! நம்பிக்கை கொடுக்கும் அரசின் சிறப்புத் திட்டம் 

இந்த மாநாட்டில், இனி வர்த்தகம் தங்கத்தைச் சார்ந்தில்லாமலும், அதே சமயம் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கும் வகையிலும் முடிவு செய்யப்பட்டது. அதனால் டாலரில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாட்டின் நாணயத்தையும் டாலராக மாற்றுவதற்கான விகிதமும் முடிவு செய்யப்பட்டது. அதே போல் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் என்ற மதிப்பில், தங்கம் டாலராக மாற்றப்பட்டது. இதனால் தங்கத்திற்கு நிகரான டாலர் விலையை நிலையானதாக வைத்திருக்கும் பொறுப்பு அமெரிக்காவிற்கு இருந்தது. இதன் பின்னர் தங்க கையிருப்புக்கு பதிலாக, மற்ற நாடுகள் அமெரிக்க டாலர்களை தங்களது கையிருப்பில் குவித்தன. இவ்வாறு தான் அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக அதிகாரப்பூர்வமாக முடிசூடியது. 

ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முழு வீச்சில் செயல்பட்டன. இதனால் அமெரிக்க பொருட்கள் மற்றும் டாலருக்கான தேவை அதிகமாக இருந்தது. 1960களில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானின் ஏற்றுமதி, அமெரிக்க ஏற்றுமதியுடன் போட்டியிடத் தொடங்கியது. உலக உற்பத்தியில் அமெரிக்க பங்கு குறைந்ததால் டாலருக்கான தேவையும் குறைந்தது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்கத்தை டாலராக மாற்றுவதற்கு பதில், டாலரைத் தங்கமாக மாற்றத் தொடங்கின. 

இறுதியில், அமெரிக்காவிடம் தங்கத்தை விட டாலரின் இருப்பு அதிகமானது.  இதனைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், வெளிநாடுகள் தங்களிடமுள்ள டாலரைத் தங்கமாக மாற்றுவதற்குத் தடை விதித்தார்.  இந்த தடை மூலம் பிரிட்டன் உட்ஸ் மாநாடு தீர்மானங்கள் முடிவுக்கு வந்தன. இதன் பின்னர் பல்வேறு காலக்கட்டங்களில் பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதும், அமெரிக்க டாலரே சர்வதேச நாணயமாக இருந்து வருகிறது.

இது டாலரின் வரலாறு. ஆனால், இப்போது ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைகிறது? இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி அண்மையில் வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் இந்தியாவிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் இங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதே போல் நமது ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம்.  பல மாதங்கள் உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவிய போரினால் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அதனால சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கங்களினாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், இந்தியா அதனுடைய  எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி தான் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவினுடைய ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும் சூழலில், இந்தப் பற்றாக்குறை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இப்படி இன்னும் பல காரணங்கள் உள்ளன. 

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் நமக்கு என்ன பாதிப்பு? 

தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 82 ரூபாயாக உள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து ஒரு பொருளை வாங்க நாம் அதிக விலை கொடுக்க வேண்டும். அதே போல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும், நமக்கு போதிய விலை கிடைக்காது. ஆகையால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் , சர்வதேச சந்தையில் நமது பொருட்கள் மலிவாக கிடைக்க கூடிய நிலைக்கு தள்ளப்படும். இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News