மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE நடத்துகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி CBSE அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உத்தரவிட்டது. ஆதாருக்கு பதிலாக மாணவ, மாணவிகள் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதில் எதை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கிறபோது பயன்படுத்துகிறார்களோ, அந்த அடையாள ஆவணத்தை தேர்வு எழுதும் வரும் மாணவ, மாணவிகள் காட்ட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் CBSE தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.