இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கெனெவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் பதிலாக, ஜெயதேவ் உனத்கட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தமீம் இக்பால் உட்பட தொடக்க வீரர்களை வாஷிங்டன் சுந்தர், சஹல் இணை விரைவாக வெளியேற்ற, வங்கதேச அணி நெருக்கடிக்கு உள்ளானது.
இருப்பினும், அந்த அணியின் ஷபீர் ரஹ்மான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்டுகளும், உனத்கட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிர்ச்சி அளித்தார். 10 ரன்களில் அவர் அவுட் ஆக, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பாகி விளையாடி அரைசதம் அடித்தார். 56 ரன்களில் அவர் அவுட் ஆன பொது பரபரப்பானது. கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த பொது மனிஷ் பாண்டே ஆட்டமிழந்தார்.அதை தொடர்ந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
வீரர் தினேஷ் கார்த்திக் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் என 6 பந்துகளில் 22 ரன்கள் குவிக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட சிறப்பாக விளையாடிய மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் 19.5 ஓவரில் அவர் ஆட்டமிழக்க வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி நிதாஹஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார்.