சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பல லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Employment Exchange) தங்களது சான்றிதழ்களை பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். தற்போது நிலவும் தொற்றுநோயால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக பதிவு அந்தந்த நிறுவனங்களில் செய்யப்படுகிறது. ஆனால் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது, மூத்த அதிகாரிகள் இந்த மாணவர்களுக்கு உதவ சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள்.
சில பள்ளிகள், குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழைப் பதிவு செய்யத் தயாராக இருக்கும் போதிலும், மார்க் ஷீட்களை (Mark Sheet) விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது மற்றொரு தடையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தங்கள் பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். இந்த ஆண்டு, ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களும் சுமார் எட்டு லட்சம் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். இந்த எண்ணிக்கையின்படி 80 சதவீத சாத்தியமான பதிவாளர்கள் சுமார் 13.6 லட்சம் மாணவர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள்.
ALSO READ: AAVIN Recruitment 2020: மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! எப்படி விண்ணப்பிப்பது?
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், குறிப்பாக கல்லூரிக்குச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களில் சான்றிதழ்களை பதிவு செய்ய, சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று வேலைவாய்ப்பு இயக்குநரகத்தின் (Directorate Of Employment) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொற்றுநோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களை வெகுவாக பாதித்துள்ளது. 65,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் சான்றிதழ்களை புதுப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
தொற்றுநோய் காரணமாக அரசு வேலை (Government Jobs) தேடும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களை, பதிவு செய்யவோ அல்லது சான்றிதழ்களை புதுப்பிக்கவோ நேரடியாக அணுக முடியவில்லை.
தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை 68.03 லட்சமாக இருந்தது. இது ஜூன் 30 க்குள் 67.37 லட்சமாக குறைந்தது.
தொழிலாளர் துறையின் அதிகாரி ஒருவர் கூறியபோது "வேலைவாய்ப்பு இயக்குநரகம் போர்ட்டலில் ஆன்லைன் புதுப்பித்தல் ஆப்ஷன் உள்ள போதிலும், பல இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் கணினி அல்லது இணைய இணைப்பு இல்லாதவர்கள், அவர்களது சான்றிதழ்களை புதுப்பிக்க நேரில் அருகிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குதான் செல்ல வேண்டியுள்ளது” என்று கூறினார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருந்த நிலை போய், இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் உள்ள இளைஞர்களின் குழப்பங்களும் கேள்விகளும் இன்னும் அதிகமாகியுள்ளன.
ALSO READ: 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு... 25,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும் அரசின் புதிய திட்டம்!!