மேற்குவங்கத்தில் “ஜெய் ஸ்ரீராம்” , “ஜெய் மகா காளி” என்பவை மட்டுமே தங்களது முழக்கமாக இருக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது!!
மேற்குவங்கத்தில் “ஜெய் ஸ்ரீராம்” , “ஜெய் மகா காளி” என்பவை மட்டுமே எங்களது முழக்கம் என பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் விஜய்வர்கியா “ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் மகாகாளி என்பவை மட்டுமே வங்காளத்தில் இனி எங்களது முழக்கமாக இருக்கும். மேற்குவங்கம், காளியின் இடம், அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை. ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறினால், இங்கு குற்றமா..? ஏன் அது குற்றமாக கருதப்படுகிறது..? மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்.
மம்தாவுடன் எங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனைகளும் இல்லை. அவரின் கொள்கைகளான தீவிரவாத உத்திகள், எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை ஆகியவற்றிற்கு தான் நாங்கள் எதிரானவர்கள். மேற்கு வங்கத்தில் நல்ல ஆட்சியை மட்டும் கொடுப்பது பாஜகவின் நோக்கமல்ல, வன்முறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக மம்தா பானர்ஜி பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் “ஜெய்ஹிந்த்” , ஜெய் பாங்களா” என்று படங்களை தனது புரொபைல் பிக்சராக மாற்றினார். மேலும் அரசியலில் பாஜக அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.