நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது.
இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். நாளை மாலை 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, வங்க தேசம் அதிபர் அப்துல் ஹமீத் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேப்போல், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகம் மற்றும் டெல்லி மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.