பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என நிரூபனம்!

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பெருமிதம்!

Last Updated : Oct 24, 2019, 03:18 PM IST
பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என நிரூபனம்! title=

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பெருமிதம்!

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றுள்ளனர். வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன  44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும். அவற்றை ஆளும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது. 2016-க்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வசமிருந்த தொகுதிகளை அதிமுக பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பெருமளவில் பா.ம.க. பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுவாகவே தேர்தல்கள் சாதனைகளின் அடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால், திமுக  இந்த இடைத்தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. வன்னியர்களை அழிக்க வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும் என்பதையே அடிப்படைக் கொள்கையாகவும், செயல்பாடாகவும்  கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக வன்னியர்கள் நலனில் அக்கறை கொண்டவரைப் போன்று நடித்தார். வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்ததன் மூலம் வன்னியர்கள் 9 ஆண்டுகால சமூகநீதிப் போராட்டங்களையும், 21 சொந்தங்களின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார். திமுக ஆட்சியில் பலமுறை நான் வலியுறுத்தியும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கலைஞர் மறுத்து விட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். மு.க. ஸ்டாலினின் பொய் வணிகத்தை அறிக்கைகள் மூலமாகவும், பிரச்சாரத்தின் மூலமாகவும் அம்பலப்படுத்தினேன். அதன்பயனாக, எந்த மக்களை மு.க. ஸ்டாலின் ஏமாற்ற முயன்றாரோ, அதே மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர்.

திமுகவுக்காக செய்த தியாகங்களின் அடிப்படையில் ஒப்பிட்டால் ஏ.கோவிந்தசாமி அவர்களின் உயரத்தை கலைஞரால் எந்தக் காலத்திலும் எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால், கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வசூலித்து பணிகளைத் தொடங்கிய ஸ்டாலின், திமுகவுக்காக உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்த ஏ.ஜி. அவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக மணிமண்டபம் கட்டாமல், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணி மண்டபம் அமைப்போம் என்று கூறினார். இதெல்லாம் தங்களை முட்டாள்கள் ஆக்கும் முயற்சி என்பதை வன்னியர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர். அதனால் தான் தோல்வியை பரிசாகக் கொடுத்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் தான் தாங்கள் இருப்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை, மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை.  மக்களவைத் தேர்தலில் பொய்களை விதைத்து, வெற்றிகளை அறுவடை செய்த தங்களை ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் தங்களை  எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி மக்கள் நிரூபித்துள்ளனர். இது அவர்களின் குரல் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலும் இது தான்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். இரு தொகுதிகளிலும்  வெற்றிக்காக கடுமையாக உழைத்த அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் மேலாக, பொன்னான வாக்குகளை வழங்கி, வெற்றிகளை பரிசாக அளித்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். 

 

Trending News