Happy Birthday நிர்மலா சீதாராமன்: சேல்ஸ் கேர்ள் முதல் நிதியமைச்சர் வரையிலான பயணம்...

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து நாட்டின் நிதியமைச்சராகும் வரை அவர் மேற்கொண்ட பயணம் உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கிறது..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 02:00 PM IST
Happy Birthday நிர்மலா சீதாராமன்: சேல்ஸ் கேர்ள் முதல் நிதியமைச்சர் வரையிலான பயணம்...  title=

புதுடெல்லி: இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து நாட்டின் நிதியமைச்சராகும் வரை அவர் மேற்கொண்ட பயணம் உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கிறது.

நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த பெண், தனது கடின உழைப்பினால் நாட்டின் நிதியமைச்சராக உயர்வது என்பது மிகப் பெரிய சாதனை.  

நிர்மலா சீதாராமன் மட்டுமே, நாட்டின் முழுநேர நிதி அமைச்சராக இருக்கும் முதல் இந்தியப் பெண். இதற்கு முன்னர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71 காலகட்டத்தில் நிதியமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை வகித்தார்.  

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாழ்க்கை பலருக்கும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியப் பெண்களுக்கு ஊக்கமளிக்கும்.  

நிர்மலா சீதாராமன் 1959 ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நாராயணன் சீதாராமன் ரயில்வேயில் பணிபுரிந்தார். தாய் சாவித்ரி சீதாராமன், இல்லத்தரசி. 

நிர்மலா சென்னை மற்றும் திருச்சியில் படித்தார். 1980இல், திருச்சிராப்பள்ளியில் உள்ள சீதலட்சுமி ராமசாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, 1984 இல் டெல்லிக்கு வந்து ஜே.என்.யுவில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் நிர்மலா சீதாராமன்.

லண்டனில் விற்பனையாளராக வேலை
JNUவில் படிக்கும் போது, பரகல பிரபாகரை சந்தித்தார் நிர்மலா. பரகல பிரபாகரின் (Parakala Prabhakar) குடும்பத்தில் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தகவல் தொடர்பு ஆலோசகராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டில், நிர்மலாவுக்கும் பரகலா பிரபாகருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு, நிர்மலா-பிரபாகர் தம்பதிகள் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 

லண்டனுக்கு வந்த பிறகு, Price Waterhouse ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வில் மூத்த மேலாளராக பணியாற்றினார் நிர்மலா. ஆனால் அங்கு வேலைக்கு சேருவதற்கு முன்பு, லண்டனின் ரீஜண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு வீட்டு அலங்காரக் கடையில் சில நாட்கள் விற்பனைப் பெண்ணாகவும் பணிபுரிந்தார். அவர் 1991 இல் இந்தியா திரும்பினார். ஹைதரபாத்தில் இருக்கும் பொது கொள்கை ஆய்வு மையத்தின் துணை தலைவராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம்

அவரது கணவர் பிரபாகர் மற்றும் குடும்பத்தினர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்றாலும், நிர்மலா, 2006இல் பாஜகவில் சேர்ந்தார். அவரது அரசியல் வாழ்க்கையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. நான்கே ஆண்டுகளில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உயர்ந்தார். 

சிறந்த முறையில் பணியாற்றியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு கட்சியில் நல்ல பெயர் கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பணிகளைப் பாராட்டினார். நிர்மலாவின் சுமூகமான பழக்க வழக்கங்களும், தெளிவாகவும் அன்பாகவும் பேசும் பாணியும் அவருக்கு அனைவரிடமும், மதிப்பையும் மரியாதையும் பெற்றுத் தந்தது.  அவர் மீதான நம்பிக்கைகள் ஆழமான பிறகு, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாரமனுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு மோடி அமைச்சரவையில் இடத்தையும் பெற்றுத்தந்தது.  2014 மே மாதம் மத்திய அமைச்சராக பதவியேற்றார் தமிழகத்தின் பெருமையான நிர்மலா சீதாராமன்.  

Also Read | சீனாவின் CPECயால் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சிக்கல்

அரசியல் வெற்றிகள்
நிர்மலா சீதாராமன், தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் நிதி அமைச்சராகவும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணையமைச்சராக பணியாற்றியுள்ள நிர்மலா சீதாராமன், 2017 ல் அவர் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். முழுநேர பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த நாட்டின் முதல் பெண் நிர்மலா சீதாராமன் என்பதும் கூடுதல் சிறப்பு.

முன்னதாக, இந்திரா காந்தி பாதுகாப்பு அமைச்சராக  கூடுதல் பொறுப்பை வகித்துவந்தார். இந்திரா காந்திக்கு பிறகு நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற பொறுப்புகளை ஏற்றிருக்கும் முதல் பெண்மணி நிர்மலா சீதாராமன் மட்டுமே. அதிலும், இந்திரா இரண்டு அமைச்சகங்களிலும் கூடுதல் பொறுப்பு தான் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே... 

Trending News