ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர்களின் உயர் கல்வி கற்பதற்காக பி.எம்.எஸ்.எஸ்.எஸ். என பிரதமர் சிறப்பு கல்வி நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் 'மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் மத்திய அரசால் அளிக்கப்படு வரும் நிதி உதவி திட்டமானது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில மாணவர்களின் நடத்தையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளதா தெரிவித்துள்ளனர். இந்த கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களில் அதிகமானோர் வெளி மாநிலங்களுக்கு சென்று மேல் படிப்புகளை தொடரவும் வேலை செய்யவும் தயாராக உள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் போது, தங்களின் அறிவுத்திறன், பிற மாநிலங்களின் மக்களுடன் அனுசரித்து போகும் தன்மை அதிகரிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள், மொழி பிரச்னையால், சில மாநிலங்களில் வசிப்பது சிரமமாக இருந்ததாக கூறியுள்ளனர் என இவ்வாறு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளிமாநிலங்களுக்கு சென்று படிக்க விரும்பும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், விடுதி கட்டணமாக, ஆண்டுக்கு, 90 ஆயிரம் ரூபாய், எழுதுபொருள், புத்தகம் வாங்குவதற்கான செலவு தொகையாக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. கல்வி கட்டணமாக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.