குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ

Monkeypox Symptoms: நோயின் முதல் அறிகுறிகளை அனுபவித்த சில நாட்களுக்குப் பிறகு, தட்டம்மையில் ஏற்படுவது போன்ற சொறி போன்ற அறிகுறிகள் பொதுவாக தோன்றும். முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2022, 11:55 AM IST
  • மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று மக்களை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது.
  • குரங்கு அம்மை எப்படி வருகிறது? இதன் பரவல் திறன் என்ன?
  • குரங்கு அம்மை நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ title=

கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்கொண்டு ஏற்கனவே ஆட்டிப்படைத்து வருகிறது. அதன் பிடி சற்று தளர்ந்து, உலக மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், தற்போது மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று மக்களை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், இங்கிலாந்தில் குரங்கு அம்மை தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் இது அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட குறைந்தது 17 நாடுகளில் பதிவாகியுள்ளது. பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளைத் தவிர, இப்பதிகளுக்கு வெளியே குரங்கு அம்மை அரிதாகவே காணப்படுகிறது. அமெரிக்காவில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, எட்டு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம். 

குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெரும்பாலும் கொறித்துண்ணிகளிடையே பரவுகிறது. இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட குரங்குகளில், பாக்ஸ், அதாவது அம்மை தொற்று ஏற்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு குரங்கு அம்மை என்ற பெயர் வந்தது. 

மனிதர்களில் இந்த தொற்று முதன் முதலில், 1970 இல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் 9 வயது சிறுவனுக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளில் இந்நோய் கண்டறியப்பட்டாலும், காங்கோ படுகையில் உள்ள கிராமப்புற, மழைக்காடு பகுதிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. உதாரணமாக, நைஜீரியாவில், பொதுவாக ஒரு வருடத்திற்கு சில டஜன் பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. 

மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO 

குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மையின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:

- காய்ச்சல்

- தலைவலி,

- தசைவலி

- முதுகுவலி

- சுரப்பிகளில் வீக்கம்

- குளிர் மற்றும் சோர்வு 

நோயின் முதல் அறிகுறிகளை அனுபவித்த சில நாட்களுக்குப் பிறகு, தட்டம்மையில் ஏற்படுவது போன்ற சொறி போன்ற அறிகுறிகள் பொதுவாக தோன்றும். முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. சொறி இறுதியில் சிரங்குகளை உருவாக்குகிறது. இந்த சிரங்குகள் பின்னர் விழுந்துவிடும்.

குரங்கு அம்மை எப்படி வருகிறது? இதன் பரவல் திறன் என்ன? 

குரங்கு அம்மை மக்களிடையே எளிதில் பரவாது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பெரும்பாலானோருக்கு பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதால் தொற்று பரவுகிறது. ஒரு நபருக்கு சொறி இருந்தால் மட்டுமே அவர் இந்த தொற்றை பரப்ப முடியும் என நம்பப்படுகின்றது. ஆனால், அது தவறான கருத்து. ஆடை, படுக்கை அல்லது துண்டுகள், தோல், குரங்கு அம்மை சொறி இருக்கும் நபரின் இருமல் அல்லது தும்மல் போன்றவற்றின் மூலமும் இது ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. 

குரங்கு அம்மை நோய் கொடியதா?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயாளிகள் ஒரு சில வாரங்களுக்குள் குணமடைந்து விடுகிறார்கள். எனினும், இந்த நோய் ஒரு கொடிய நோயாகவும் உருவெடுக்கக்கூடும். மத்திய ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதங்களை 10% வரை மதிப்பிட்டுள்ளன. இளம் குழந்தைகளிடையே அதிக இறப்பு விகிதம் உள்ளது. இந்த வைரசின் மற்றொரு வகை, குறைந்த தீவிரம் கொண்டதாக கருதப்படுகின்றது. இதன் இறப்பு விகிதம் சுமார் 1% ஆகும்.

குரங்கு அம்மை நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தோல் பராமரிப்பு, வலி ​​நிவாரணம் வழங்குதல், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டால் சிகிச்சையளித்தல் மற்றும் உளவியல் ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் நோயாளிகளின் அறிகுறிகளைப் போக்க மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

நோயின் தீவிரம் கடுமையாக இருக்கும் சந்தர்ப்பங்களில், பெரியம்மை நோயை இலக்காகக் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உள்ளதா?

குரங்கு அம்மைக்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் இல்லை. எனினும், பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி, இந்த நோயிலிருந்தும் பாதுகாப்பபு அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, குரங்கு அம்மையைத் தடுப்பதில் பெரியம்மை தடுப்பூசி குறைந்தது 85% பயனுள்ளதாக இருக்கும் என்று ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள தரவு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News