ஆம்ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்விக்குக் காரணம் ஆம் ஆத்மி கட்சியில் ஊழலே என அக்கட்சியின் எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறி இருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்களை சீர்செய்ய கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ குமார் விஸ்வாஸ் வலியுறுத்தி இருந்தார்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி குமார் விஸ்வாசிற்கும், டெல்லி தலைவர் அமனத்துல்லா கானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் விஸ்வாஸ் 3 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார் என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மணிஷ் சிசோடியாவுடன் குமாரின் வீட்டிற்கு சென்ற கெஜ்ரிவால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பின்னர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு குமார் அழைத்து வரப்பட்டு, பல முக்கிய தலைவர்கள் பேசி உள்ளனர். நள்ளிரவு வரை நீடித்து சமாதான பேச்சுவார்த்தைக்கும் பிறகும் குமார் சமாதானம் ஆகவில்லை
3 விதமான கோரிக்கைகளில் ஒன்று அமனத்துல்லா கானை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது. தனது நிபந்தனைகளில் இருந்து பின் வாங்க குமார் தரப்பு மறுத்து விட்டதால் வேறு வழியின்றி கெஜ்ரிவாலும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். குமார் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அமனத்துல்லா கான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், ராஜஸ்தான் மாநில ஆம்ஆத்மி கட்சி தலைவராக குமார் விஸ்வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
குமார் விஸ்வாஷை நேரில் சென்று கெஜ்ரிவால் சமாதானம் பேசியதாலேயே கட்சியில் இருந்து விலகும் முடிவை அவர் கை விட்டதாக கூறப்படுகிறது.