ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்... திடீர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

Ravichandran Ashwin Retirement: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2024, 12:53 PM IST
  • அஸ்வினுக்கு வயது 38 ஆகும்.
  • தோனி 2014ஆம் ஆண்டில் இதேபோல் தொடரின் நடுவே திடீரென ஓய்வு பெற்றார்.
  • தற்போது அதேபோல், தொடரின் நடுவே அஸ்வினும் ஓய்வு
ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்... திடீர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி title=

Ravichandran Ashwin Retirement Announcement: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 38 ஆகும்.

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவருக்கு, இந்த போட்டியில் இடம்கிடைக்கவில்லை. அடுத்த கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற சூழலில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதையொட்டி, மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அஸ்வின் ஓய்வு அறிவிப்பு

அப்போது பேசிய அவர்,"இந்திய கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் அனைத்து பார்மட்களிலும் இது எனது கடைசி ஆண்டாக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக எனுக்குள் இன்னும் அந்த வேட்கை மிச்சம் இருப்பதாக நான் உணர்கிறேன், ஆனால் நான் இனி அதை கிளப் அளவிலான கிரிக்கெட்டில் வெளிப்படுத்த விரும்புகிறேன்" என்றார். 

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, புஜாரா உள்ளிட்ட சக வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர் "நாங்கள் OG-களின் (Original) கடைசிக்கட்ட வீரர்கள் எனலாம்" என்றார். OG என்றால் ஒரிஜினல் என பொதுவாக கூறப்படும். அதாவது, ஒரிஜினல் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் நாங்கள்தான் கடைசி என அஸ்வின் பெருமையாக சொல்லியிருக்கிறார்.

மேலும் படிக்க | ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!

மேலும், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, புஜாரா உள்ளிட்ட சக வீரர்கள் மைதானத்தில் அருமையான கேட்ச்களை பிடித்து தனக்கு இத்தனை விக்கெட்டுகளை பெற்று தந்ததற்கும் நன்றி என்றார். மேலும், பத்திரிகையாளர்களுக்கும் அஸ்வின் நன்றி தெரிவித்தார். ஆஸ்திரேலியா அணிக்கு நன்றி தெரிவித்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் விளையாடிய போதெல்லாம் கொண்டாட்டத்துடனே விளையாடினேன் என்றார்.

டிராவில் முடிந்த 3ஆவது போட்டி

காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 274 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும் கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தில் முடிவை எட்ட முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 வெற்றியுடன் சம நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. மெல்போர்ன் நகரில் வரும் டிச. 26ஆம் தேதியும், சிட்னி நகரில் வரும் ஜன.3ஆம் தேதியும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இரு போட்டிகளிலும் வென்றால்தான் அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இயலும்.

ரவிசந்திரன் அஸ்வின் - 14 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்வு

ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று பார்மட்களிலும் இந்திய அணிக்கு சிறப்பான பந்துவீச்சாளராக மட்டுமின்றி ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார் எனலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டில் அறிமுகமான அஸ்வின் மொத்தம் 106 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 200 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 537 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதில் 37 முறை இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 8 முறை ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவரின் சராசரி 24.01 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். 619 விக்கெட்டுகளுடன் கும்ப்ளே முதலிடத்தில் நீடிக்கிறார். 

டெஸ்ட் பேட்டிங்கில் 151 இன்னிங்ஸில் 3,503 ரன்களை அடித்துள்ளார். இதில் 14 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடக்கம். ரவிசந்திரன் அஸ்வின் 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 சர்வதேச டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஒருமுறை அரைசதம் அடித்துள்ளார். அஸ்வின் இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 2024 தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை ஐபிஎல் தொடரில் அஸ்வின் 211 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News