ஏர் இந்தியா-பாரத் பெட்ரோலியம் இரண்டு நிறுவனங்களையும் மார்ச் 2020-க்குள் தனியாருக்கு விற்க அரசு திட்டம்!!
டெல்லி: 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசு வழங்கும் விமான நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தல் பொதுத்துறை நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) ஆகியவற்றை தனியாரிடம் விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்து ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில்; பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய அரசு தேவையான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வங்கிகள் மூலமாக 1. 8 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டதும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டு இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளும் முடிவுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கள நிலவரங்கள் குறித்து ஆராயப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் ஏதும் வராததால் ஓராண்டுக்கு முன்பே, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை விற்க முடியாமல் போனது. சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல துறைகள் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளன. சில துறைகளில் GST வரி வசூலால் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.